அரசுத் தேர்வுகள் இயக்ககம்

அறிமுகம் :-

 • அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து வகைப்பள்ளிகளில் பயின்று வரும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களது கற்றல் அடைவினைத் துல்லியமாக அளவிடும் வகையில் பொதுத் தேர்வுகளை நடத்தி மிக முக்கிய மற்றும் நிரந்தர ஆவணமான மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி உயர்கல்வி தொடர வழிவகுக்கிறது.
 • மேற்காணும் தேர்வுகள் மட்டுமின்றி தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள், உதவித்தொகைக்கான தேர்வுகள் உட்பட மாநில பள்ளித்தேர்வுகள் வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அனைத்துத் தேர்வுகளுக்கும் வினாத்தாள் தயாரித்து வழங்குதல், தேர்வுகளை ஒளிவு மறைவின்றி நடத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல், மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் ஆகிய பணிகளில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஈடுபட்டுள்ளது.
 • அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கீழ் 7 மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் உட்பட்ட தேர்வு மையங்களுக்குத் தேவையான எழுதுபொருள்கள், தேர்விற்கான முன்பணங்கள் விநியோகம் செய்தல், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் போன்ற முக்கிய பணிகள் மேற்படி மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.
 • அரசாணை எண்.26, பள்ளிக் கல்வி (வி1) துறை நாள். 16.02.2011 ன்படி, இடைநிலைக் கல்விக் குழுமம் மற்றும் மேல்நிலைத் தேர்வுக் குழுமம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய “மாநில பள்ளித் தேர்வுகள் வாரியம்” (State Board of School Examinations) என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அரசு ஆணையிட்டுள்ளது. மேற்படி வாரியம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்து ஆலோசனைகள் பெறவும் கலந்து முடிவுகள் மேற்கொள்ளவும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • 1. மேல்நிலைக் கல்வி, இடைநிலைக் கல்வி, ஆசிரியர் கல்வி போன்ற தேர்வுகளுக்குச்சான்றிதழ் வழங்குவதில் விதி முறைகள் உருவாக்குதல்
  • 2. மேற்காண் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள் அமைத்தல்
  • 3. மேற்காண் தேர்வுகளுக்கான ஒழுங்கு முறை விதிகள் வகுத்தல்.
  • 4 .ஒழுங்கீனச் செயல் வழக்குகளைத்தீர்வு செய்தல் தொடர்பான விதிகள் வகுத்தல்
  • 5. தேர்வுப் பாடங்கள் தொடர்பான கால அளவு (நேரம்) தீர்மானித்தல்
  • 6. சான்றிதழ்கள் வடிவமைத்தல்.
  • 7. இத்தேர்வுகளை நடத்துவதற்கான தேர்வுத்திட்டத்தினை வடிவமைத்தல். (Preparation of scheme of Examinations)
 • மேற்படி குழுமத்திற்குப்பதவி வழி உறுப்பினர்கள், பல்கலைக் கழகப்பிரதிநிதிகள், நியமன உறுப்பினர்கள், பொது உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கும் இத்தேர்வு வாரியம் புதுப்பிக்கப்பட்டு, உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.