செயல்பாடுகள்

மேல்நிலை மற்றும் இடைநிலைப்பொதுத் தேர்வுகள் (Hr.Sec & SSLC Examinations)

அரசுத் தேர்வுகள் இயக்ககம் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து வகைப்பள்ளிகளில் பயின்று வரும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களது கற்றல் அடைவினைத் துல்லியமாக அளவிடும் வகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத் தேர்வுகளை நடத்தி மிக முக்கிய மற்றும் நிரந்தர ஆவணமான மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி உயர்கல்வி தொடர வழிவகுக்கிறது. நடைபெற்று முடிந்த மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத்தேர்வில், 9,33,690 இலட்சம் தேர்வர்களும், இடைநிலைப் பொதுத்தேர்வில் 10,25,909 இலட்சம் தேர்வர்களும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

எட்டாம் வகுப்புத் தேர்வு (E.S.L.C Examination)

குறைந்தபட்சக்கல்வித் தகுதியை வழங்குவதற்கும் வேலைவாய்ப்பிற்காகவும், அடிப்படை நிலையில் பதவி உயர்விற்காகவும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காகவும், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அரசுத் தொழில் நுட்பத் தேர்வு (Technical Education)

குறைந்தபட்ச தொழில்நுட்பக் கல்வித் தகுதியை வழங்குவதற்கும் வேலைவாய்ப்பிற்காகவும் அரசுத் தொழில் நுட்பத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நுட்பத் தேர்வு கீழ்நிலை, மேல்நிலை என இருநிலைகளில் நடத்தப்படுகிறது. கீழ்நிலைத் தேர்விற்குக்குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேல்நிலைத்தேர்விற்குப்பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (Diploma in Elementary Education)

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் , இடைநிலை ஆசிரியர்களை உருவாக்குவதற்காகத்தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு இரண்டாண்டு காலப்பயிற்சிகள் பின் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறுகூட்டல் மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஜூன் 2014 முதல் மாணவர்கள் நலன் கருதி விடைத்தாள் ஒளிநகல் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. விடைத்தாட்களின் ஒளிநகல் பெற்றவர்கள் விரும்பினால் விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

10 மற்றும் 12 ஆம் வகுப்புப்பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜுன்/ஜுலை மாதங்களில் உடனடித் தேர்வு / சிறப்புத் துணைத் தேர்வு நடத்துதல் (Special Supplementary Examinations)

ஒரு கல்வி ஆண்டு வீணாகாமல் படிப்பினைத் தொடர மார்ச் / ஏப்ரல் பருவ பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியுற்ற மாணவர்கள் நலனுக்காக உடனடித் தேர்வு / சிறப்புத்துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு ஊரக மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST)

ஊரக மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு ஊரக மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது.

கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஊரக மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கும் மிகாமல் இருக்கும்பட்சத்தில், இத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 மாணவியர் மற்றும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தேசிய அளவிலான திறனறி தேர்வு (National Talent Search Examinations)

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான திறனறி தேர்வினைத்தமிழகத்தில் நடத்த, அரசுத்தேர்வுகள் இயக்ககம் ஒருங்கிணைப்பு அங்கமாக செயல்படுகிறது. இத்தேர்வின் முதல்நிலை அரசு தேர்வுகள் இயக்ககத்தாலும், இரண்டாம் நிலை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தாலும் நடத்தப்படுகிறது. 2014-2015-ஆம் கல்வி ஆண்டு முதல் மத்திய/மாநிலப் பள்ளிக்குழுமங்களில் 10-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அனைவரும் இத்தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் ஆவர்.

முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்படுகிறது பின்னர் தகுதியுள்ள தேர்வர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இரண்டாம் நிலைத் தேர்வுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகின்றது. இந்நேர்காணலில் தெரிவு செய்யப்படும் 236 மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உதவித்தொகை மாதம் ரூ.500/-ம் , பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படியும், படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு (National Mean cum Merit Scholarship Examinations)

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை (National Means cum merit scholarship) பெறுவதற்கான தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

மத்திய / மாநில அரசுப் பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பில் பயிலும் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைப்சேர்ந்த மாணவர்கள் 50%, ஏனையோர் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் ) மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1,50,000/-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் தேர்வெழுதத் தகுதியுடையவர்கள். தேர்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500/- உதவித்தொகையாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆண்டுதோறும் 6695 மாணவர்களுக்குப் படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு தேசிய திறனறிவு தேர்விலிருந்து பிரிக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் மற்றும் மறுபிரதிச் சான்றிதழ் வழங்குதல் (Duplicate Certificate)

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களைத்தவறவிட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் (CCM) மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் (Duplicate Certificate) நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது .

புலப்பெயர்ச்சிச் சான்றிதழ் வழங்குதல் (MIGRATION CERTIFICATE)

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிற மாநிலங்களில் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குப் புலப்பெயர்ச்சிச் சான்றிதழ்கள் (MIGRATION CERTIFICATE) வழங்கப்படுகின்றன.

12-ஆம் வகுப்புப்தேர்வுத்விடைத்தாள்கள் மறுமதிப்பீடு (Hr.sec Revaluation)

12-ஆம் வகுப்புத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான பின்னர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் சரிதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அவர்களுடைய விருப்பத்தின் பேரில் விடைத்தாள்கள் scaned நகல்கள் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. விடைத்தாள்களின் scaned நகல் பெற்றவர்கள் விரும்பினால் விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கும் பணி மறுமதிப்பீடு/மறுகூட்டல் பணிகளும் முடிவடைந்து திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் பொறியியல் மற்றும் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டு வருகிறது.

மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தினால் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துதல் (UPSC Examinations)

மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தினால் நடத்தப்படும் தேர்வுகளை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் பொறுப்பேற்று சென்னையில் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மையினைச் சரிபார்த்தல் (Mark Sheet Verfication)

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை வழங்கும் பணி தற்போது கணினி வழி மற்றும் மதிப்பெண் பதிவேடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆன்-லைன் மூலமாக மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் செயல்படுத்த NIC மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.